நாட்டில் பணவீக்கம் மற்றும் சர்வதேச சூழல் காரணமாக வட்டி விகிதம் தொடர்ந்து உயர்வாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த ஆண்டு பணவீக்கம் கடுமையாக உயர்ந்தது. இதனால், மே மாதம் முதல் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. அப்போது, வட்டி விகிதம் 4 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஏற்கெனவே, பல்வேறு கடன்களுக்கு வட்டி விகிதம் உயர்வாக உள்ள நிலையில், தற்போது, வட்டி வகித்ததை ரிசர்வ் வங்கி குறைக்கும் என பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், சர்வதேச சூழல் காரணமாக வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்தே காணப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, புது டெல்லியில் நடைபெற்ற கவுடியா பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கப் பத்திரங்களின் வருமானம் உயர்வு, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகம் முழுவதும் உள்ள வங்கிகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வட்டியைக் குறைப்பதற்கான எந்தத் திட்டமும் இப்போது ரிசர்வ் வங்கியிடம் இல்லை.
பண வீக்கம், மந்த நிலை, நிதிநிலை பாதிப்புகள் ஆகியவை உலகளவில் பெரும் சவால்களாக உள்ளன. இதனால், வரும் காலத்தில் வட்டி விகிதம் உயர்வாகவே காணப்படும்.
எத்தனை நாள்களுக்கு இந்த போக்கு நீடிக்கும் என்பது தெரியாது. காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன் போன்ற கடன் வாங்கியவர்களுக்கான இ.எம்.ஐ குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.