விதை ஒன்று முளைத்து, பெரும் விருட்சமாக வளரும்போது, பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வது இயற்கையே எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து வளர்ந்து, பலருக்கும் உதவும் மரமாவது அந்த விதையின் இயல்பு. தமிழக பாஜகவும் அப்படித்தான். சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்துத் தாக்கியதில் பலியான 11 பலிதானிகள், சேலம் ஆடிட்டர் ரமேஷ் அவர்கள், பாடி சுரேஷ் அவர்கள், கோவை சசிக்குமார் அவர்கள் என பலர் தங்கள் ரத்தம் சிந்தி, தங்கள் இன்னுயிரையும் ஈந்த தியாகம் என்றும் வீண்போகாது.
பாஜக, ஊழல்வாதிகளுக்கும், வாரிசு அரசியலுக்கும், தீவிரவாதிகளுக்கும், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் கம்யூனிஸ்ட்களுக்கும் எதிரான கட்சி. நாம் தேர்ந்தெடுத்துப் பயணித்துக் கொண்டிருக்கும் பாதை கடினமாகத் தோன்றலாம். நம்மை அச்சுறுத்த, நம் சகோதரர்களை, சாதாரண சமூக வலைத்தளப் பதிவுகளுக்குக் கூட கைது செய்து, நம் உற்சாகத்தை முடக்க முயற்சிக்கலாம். ஆனால், ஒரு நாளும் நம் போராட்ட இயல்பை மாற்றிவிட முடியாது. நம் வளர்ச்சியைத் தடுக்க அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நாம் பயணிக்கும் பாதை மிகச் சரியானது என்பதையே உணர்த்துகிறது.
கப்பலைக் கட்டுவது, கரையில் அமைதியாக நிறுத்தி வைக்க அல்ல. ஆழிப் பேரலைகளை எதிர்கொண்டு கடலில் பயணம் செய்வதற்குத்தான். ஒவ்வொரு தடையையும் நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு கடக்கும்போது, அது நமக்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது. இறுதியில் நம் இலக்கை சென்று அடைவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது.
வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜக பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஊழல் கட்சிகளுக்கு, இந்த உண்மை தெரிந்திருப்பதால், பயத்திலும், பதட்டத்திலும் தொடர்ந்து தவறுகள் செய்து வருகிறார்கள். சாதாரண ஒரு கொடிக்கம்பத்தை அகற்ற, மாநகர காவல்துறை ஆணையாளர் அளவிலான அதிகாரியை முன்னிறுத்தும்போதே, திமுகவின் நடுக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது.
திமுக உள்ளிட்ட கட்சிகளின் நடுக்கமே, நமது சிறப்பான களப்பணிக்கான அங்கீகாரம் ஆகும். ஊழல் மற்றும் மக்கள் விரோத திமுகவை மக்கள் முன் அம்பலப்படுத்துவதே, நம் மீதான திமுக அரசின் அடக்குமுறைக்கான முறையான பழிவாங்குதல் ஆகும். மக்களுக்கான நமது நலப்பணிகளைத் தொடருவோம். சுயநல அரசியல் செய்யும் திமுகவின் முகமூடியை மக்கள் மத்தியில் கிழித்தெறிவோம்.
வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், தொடர்ந்து நூறு நாட்களுக்கு தமிழகமெங்கும், தினமும் நூறு இடங்கள் வீதம், பத்தாயிரம் இடங்களில் பாஜக கொடியேற்றுவோம். நூறாவது நாளான பிப்ரவரி 8 அன்று, எந்த இடத்தில் கொடிக்கம்பத்தை அகற்றி, நமது சகோதரர்களை ரத்தம் சிந்த வைத்தார்களோ அதே பனையூரில், போராட்டத்தில் காயமுற்ற நமது சகோதரர் திரு விவின் பாஸ்கரன் அவர்களது முன்னிலையில் பத்தாயிரமாவது கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை நிச்சயம் ஏற்றுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.