கொல்கத்தாவின் ஹவுராவில் உள்ள பூஜை பந்தலில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா துர்கா தேவிக்கு ஆரத்தி காட்டினார்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று காலை மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவுக்குச் சென்றார். பா.ஜ.க. மூத்த மற்றும் முக்கியத் தலைவர்கள், கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் நட்டாவுக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முன்னதாக, பா.ஜ.க. வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “கட்சியின் தேசியத் தலைவர் நட்டா கொல்கத்தாவில் உள்ள ஷோபா பஜார் ராஜ்பாரியில் அமைந்துள்ள சமுதாய பூஜை பந்தலுக்குச் சென்று துர்கா தேவியிடம் ஆசிர்வாதம் பெறுவார். தொடர்ந்து, கொல்கத்தாவின் நியூ மார்க்கெட்டில் அமைந்துள்ள சமுதாய பூஜை பந்தலைப் பார்வையிடுவார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஹவுராவில் உள்ள பூஜை பந்தலில் நட்டா துர்கா தேவிக்கு ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய நட்டா, மேற்குவங்க மக்கள் உலகுக்கு ஒரு கருத்தைச் சொல்வதில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த மண்ணில் உள்ள துஷ்ட சக்திகள் அழிந்து நல்ல சக்திகள் வலிமை பெற நான் பிரார்த்திக்கிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில், நட்டாவுடன் கட்சித் தலைவர்கள் சுகந்தா மஜும்தார், சுவேந்து அதிகாரி மற்றும் அக்னிமித்ரா பால் ஆகியோரும் உடனிருந்தனர்.