ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் 21 வது லீக் போட்டி தர்மசாலா மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும். கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பையில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதை மாற்றி எழுத இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய அணி நேற்று பயிற்சி மேற்கொண்டது. அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த சூர்யகுமார் யாதவின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்ளாமல் வெளியேறினார்.
ஏற்கனவே, ஹர்திக் பாண்டியா காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் அல்லது இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், இஷான் கிஷன் பயிற்சி மேற்கொண்டபோது, திடீரென தேனீக்கள் படையெடுத்து வந்தன. அப்போது இஷான் கிஷனை சில தேனீக்கள் கொட்டின. இதனால் அவரும் பயிற்சியை கைவிட்டு வெளியேறினார். ஆனால், விளையாட முடியாத வகையில் அவருக்கு ஆபத்து இல்லை.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்பப் போகும் வீரர் யார் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.