ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா சென்றதோடு, கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகவும் ஹமாஸ் தீவிரவாதியின் மகன் பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.
பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்தவர் மொசாப் ஹசன் யூசப். ஹமாஸ் தீவிரவாத அமைப்பை நிறுவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரது மகன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அங்குள்ள செய்திச் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.
அப்பேட்டியில், “பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு தலைமை வகித்த குடும்பத்தில் பிறந்தேன். அந்த உலகத்தின் இளவரசராக வளர்க்கப்பட்டேன். ஹமாஸ் அமைப்பினரைப் பற்றி எனக்கு முழுவதுமாகத் தெரியும். ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீனர்கள் மீது எப்போதுமே உண்மையான அக்கறை இருந்ததில்லை.
கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மெகிடோ சிறையில் நுாற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்தனர். அதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இச்சம்பவத்துக்குப் பிறகு ஹமாஸ் மீது எனக்கு வெறுப்பு உண்டானது. எனது சொந்த ரத்தமாக இருந்தாலும், அவர்களை விட்டுப் பிரிய முடிவெடுத்தேன்.
எனவே, பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன். இதன் பிறகு, கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, இன்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆனால், தற்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இன்றைக்கு காஸாவின் ஆட்சியாளர்களாக உருவெடுத்திருக்கின்றனர். அவர்களது ரத்தவெறி இன்றுவரை அடங்கவில்லை.
மேலும், ஹமாஸ் என்பது தேசியத்துக்கான இயக்கம் அல்ல. அது, மத்திய கிழக்கிலும், உலகம் முழுதும் இஸ்லாமிய ஆளுகையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மத அமைப்பு. இவர்கள், தங்களது நோக்கத்தை அடைவதற்காக பாலஸ்தீனர்களை பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.
இந்த அமைப்பின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கிறது. அவர்கள்தான், ஹமாஸ் அமைப்பின் முதலாளி. ஆகவே, அவர்கள் சொல்லுக்கேற்ப ஹமாஸ் அமைப்பு செயல்படுகிறது” என்று கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேட்டி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.