கூடலூர், டான்டீ குடியிருப்பை ஒட்டி உலா வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றது.
அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளைச் சேதப்படுத்துவதுடன், ஒரு சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, நாடு காணி, பொன்னூர் மற்றும் பொன் வயல் புல்வெளிகளில் முகாமிட்ட காட்டு யானைகள் நேற்று பகல் நேரங்களில் பாண்டியர் டான்டீ குடியிருப்பு அருகே தேயிலைத் தோட்டங்களில் உலா வந்தது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
டான்டீ நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் உடனே விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக ஆட்சி அமைந்தது முதல், யானைகள் விவகாரத்தில் வனத்துறையினர் மந்தகதியில் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.