தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, பா.ஜ.க. 52 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இப்பட்டியலில், பா.ஜ.க. எம்.பி. சோயம் பாபு ராவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிகாலம் நிறைவடைய உள்ளது. எனவே, இம்மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தெலங்கானாவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கும், பாரத ராஷ்ட்ர சமிதி கட்டிக்கும்தான் நேரடிப் போட்டி நிலவி வந்தது. ஆனால், இந்த முறை பா.ஜ.க.வும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு ஒரு மாதமே மிச்சம் இருப்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. பா.ஜ.க. தலைவர்களும், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த சூழலில், பா.ஜ.க. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
52 பேர் அடங்கிய இந்த வேட்பாளர் பட்டியலில், போத் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி. சோயம் பாபு ராவும், அரவிந்த் தர்மபுரி கொரூட்லா தொகுதியிலும், சஞ்சய் குமார் பண்டி கரிம் நகர் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.