புதுச்சேரி காலாப்பட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரத்தை, செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள அமலாக்கத்துறையின் துணை ஆணையர் என அறிமுகம் செய்து கொண்டதோடு, நேரில் சந்தித்துப் பேச வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அவரை அன்போடு வரவழைத்த எம்எல்ஏ தனது லாஸ்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, கடந்த 2 ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய சொத்துக்கள் தொடர்பாக உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும், நீங்கள் எங்களைக் கவனித்தால் சோதனை நடக்காது எனத் தெரிவித்துள்ளார். அதற்கு, என்னிடம் எல்லாமே சரியாக உள்ளது. நீங்கள் சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என எம்எல்ஏ பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
எதுவும் தேறாது என்பதால், அங்கிருந்து புறப்பட்டவர், அடுத்து, லாஸ்பேட்டை எம்எல்ஏ வைத்தியநாதன் வீட்டிற்குச் சென்று இதே பல்லவியைப் பாடியுள்ளார். அவேரா, பணமே என்னிடம் இல்லை. நானே கஷ்டத்தில் இருக்கிறேன். நீங்கள் வேண்டும் என்றால் கொடுத்துவிட்டு போங்கள் என்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேருவிடம் வலையை வீசியுள்ளார். அவரும் இதே பல்லவியைப் பாடி உள்ளார்.
இது என்னடா வம்பாபோச்சே என, ரெட்டியார் பாளையம் சிவசங்கரன் எம்எல்ஏ வீட்டிற்குச் சென்று தோரணையாக சென்று விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, அடையாள அட்டையை காட்டுங்கள் என கேட்க, திக்குமுக்காடிப்போனவர், அடையாள அட்டை இல்லை என சமாளித்துள்ளார்.
அதற்குள் வந்தவர் யார் என ஆடிட்டர் மூலம் ரகசியமாக விசாரிக்க, வந்த நபர் போலி அமலாக்கத்துறை அதிகாரி என்பது தெரியவந்தது.
இதையறிந்த எம்எல்ஏ ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து, ரெட்டியார்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், பிடிபட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பதும், சென்னையிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் புதுச்சேரி வந்த வரதராஜன், உருளையன்பேட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் ஒரு குடியிருப்பை நாள் வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது
மேலும், இவர் மீது திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுதான் ரூம் போட்டு ஏமாற்றுவது என்பதோ?