சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில் ஆனந்தவல்லி அம்மனுக்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது, ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் கொழு வைத்து, முளைப்பாரி எடுத்துப் பொங்கலிட்டு பாரம்பரிய முறைப்படி நவராத்திரி விழா கொண்டாடுவது வழக்கம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சதுரகிரியில் இரவில் தங்கி வழிபாடு நடத்தவும், ஆடு, கோழி பலியிடவும் வனத்துறை தடை விதித்தது. நவராத்திரி விழாவுக்கும் கட்டுப்பாடு விதித்தது.
இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ம் தேதி தொடங்கி நிலையில், 22, 23, 24 -ம் தேதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், நவராத்திரி 11 நாட்களும் மலையேற அனுமதிக்கவும், கடைசி 3 நாட்கள் இரவில் தங்கி வழிபாடு நடத்தவும் அனுமதிக்க கோரி ஏழூர் சாலியர் சமூகத் தலைவர் சடையாண்டி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பக்தர்கள் குறிப்பிட்ட நாட்களில் காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்குவது குறித்து வனத்துறை முடிவு செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலையேற தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.
அப்போது, நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி ஏற்கெனவே வழங்கிய அனுமதியையும் வனத்துறையினர் ரத்து செய்தனர். இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சதுரகிரி மலையேற அனுமதி வழங்கக்கோரி தாணிப்பாறை அடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜா உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.