நடிகை கவுதமி கொடுத்த புகாரின் மீது இத்தனை நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த திமுக அரசு. அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு அவரது புகாரை பதிவு செய்துள்ளது. கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று தெரியவில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூஜை செய்தார். மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், கடந்த ஆண்டு இதே நாளில் கோவை ஈஸ்வரன் கோயில் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் கார் சிலிண்டர் வெடிகுண்டு நிகழ்வு நடத்தினார்.
கார் வெடிகுண்டு குறித்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம்.
கோவை மாநகரம் பாதுகாப்பிற்காக இன்று காலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், புகார் அளித்தாலும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசின் மீது இருக்கிறது.
பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏதேனும் சமூக வலைதளங்களும் கருத்து தெரிவித்தால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறார்கள்.
திமுகவினர் பிரதமர் மோடியை அவதூறாக பேசி வருகிறார்கள். ஆனால் திமுகவினரை கைது செய்யாமல் பாஜகவினரை கைது செய்து வருகின்றனர். திமுகவினர், பாஜக தொண்டர்களை தாக்குவது குறித்து தேசிய தலைமை குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பாஜக உறுப்பினர் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கப்படும். திமுக அரசு பயங்கரவாதம் செய்வார்களை விட்டுவிட்டு அண்ணாமலை வீட்டில் அருகே இருந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக அகற்றியது.
அப்போது நடிகை கவுதமி குறித்த கேள்வி, பதிலளித்தவர் “எனக்கு கவுதமி மீது அதீதமான அன்பு, பாசம், மரியாதை உண்டு. பாஜகவில் கடந்த ஒருசில ஆண்டுகளாக தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி அவர்.
அவர் எந்தளவுக்கு கட்சிக்காக கடுமையாக உழைத்தார் என்பது எனக்கும் தெரியும். அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுகிறது.
பாஜக மகளிரணியில் இணைந்து பணியாற்றுவதற்காகக் கூட கவுதமியிடம் நான் ஒரு மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்டிருந்தேன். தேசிய அளவில் என்னுடன் இணைந்து பணியாற்ற அழைத்தபோது, இல்லை மாநிலத்தில் நான் பணியாற்றுவதாக கவுதமி கூறிவிட்டார்.
தற்போது, எனக்கு மாநில அளவிலான பணிகளில் எனது வேலை குறைந்துவிட்டதாலும், அதிகமாக கவுதமியை பார்ப்பதற்கோ, பழகுவதற்வோ, பேசுவதற்கோ நேரம் இல்லாமல் இருந்தது. ஆனாலும், கடந்த மாதம்கூட அவருடன் பேசினேன். என்னுடைய தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர் கவுதமி.
தான் ஒரு சினிமா ஸ்டார். தனக்கு எப்போதும் முன்னுரிமை தரவேண்டும் என்று கவுதமி ஒருபோதும் யோசித்ததே இல்லை. அந்தளவுக்கு கட்சியின் அடிப்படை தொண்டர் போல பணியாற்றக்கூடியவர்.
அவரது ராஜினாமா கடிதம் எனக்குமே மனவேதனையை கொடுத்துள்ளது. கவுதமி எதிலும் சோர்ந்துபோகும் நபர் இல்லை. அனைத்து காரியங்களையும் தைரியமாக எடுத்து செய்யக்கூடியவர். தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட பெண்ணும்கூட.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாகக்கூட, ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். முழுமையான தகவல்களைக் கொடுக்குமாறு நானும் பதில் அளித்திருந்தேன். ஆனால், அவருடைய அறிக்கையைப் பார்த்த உடன் எனக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. நிச்சயமாக கட்சிக்காரர்கள், சட்டத்துக்குப் புறம்பாக யாரையும் பாதுகாக்கப் போறது இல்லை.
கவுதமி இன்னமும்கூட மாநிலத் தலைவரிடமோ, என்னிடமோ அந்தப் பிரச்சினை குறித்து முழுமையாகக் கூறவில்லை.
அதேநேரம், ஒரு மாநில அரசு புகார் கொடுத்து இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. கவுதமி பாஜகவில் இருப்பதால், நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களா? ஏன் இத்தனை நாட்களாக அவருடைய புகாரைப் பதிவு செய்யவில்லை.
ஆனால், அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு, புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கட்சியில் இருந்து வெளியே வந்தால்தான் புகார் பதிவு செய்வேன் என்று நெருக்கடி கொடுத்தார்களா? என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே, இந்த விசயத்தைப் பொறுத்தவரை, மகளிரணி தலைவராக எனக்கும் ஒரு மனவேதனையை கொடுத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.