உலகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்று அருள்மிகு திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் இந்த திருக்கோவிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் எப்போதும் திருமலை – திருப்பதி திருக்கோவில் நிரம்பி வழிந்தபடியே இருக்கும்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நவராத்திரி பிரம்மோற்சவம், கடந்த 15 -ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்றது. 9 -வது மற்றும் கடைசி நாளான இன்று திருக்கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
அருள்மிகு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கோவிலிலிருந்து புறப்பட்டு வராக சாமி கோவில் முகமண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, சக்கரத்தாழ்வார் கோவில் திருக்குளத்திற்குக் கொண்டு சென்ற தேவஸ்தான அர்ச்சகர்கள், 3 முறை அவரை தண்ணீரில் மூழ்கச் செய்து தீர்த்தவாரி புனித நீராடல் செய்தனர்.
அப்போது, திருக்குளத்தின் 4 புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா, aகோவிந்தா எனப் பக்தி முழக்கமிட்டு, திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் உற்சவர்கள் ஊர்வலமாகக் கோவிலை அடைந்தனர். அத்துடன் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவம் பக்தி பரவசத்துடன் நிறைவு பெற்றது.