சென்னை ஆவடி அருகே அதிகாலையில் புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், இரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.
அண்ணார் பணிமனையில் இருந்து அதிகாலையில் புறநகர் பயணிகள் இரயில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த இரயில் ஆவடி இரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். ஆனால், சிக்கனலை கடந்து அந்த இரயில், வேகமாகச் சென்றது. அப்போது, ஆவடி இரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.
தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த இரயில் விபத்து காரணமாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய இரயில்கள் அனைத்தும் தாமதமானது. இதனால், சென்னைக்குச் செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று விஜயதசமி பூஜை என்பதால், பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அலுவலகம் விடுமுறை என்பதால், பயணிகள் கூட்டம் மிகமிக குறைவாகவே இருந்தது. இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரயில் ஓட்டுநர் தூங்கியதாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கிச் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.