விஜயதசமியை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
விஜயதசமி அல்லது தசரா பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவின் நிறைவுநாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது இந்து லுனி-சூரிய நாட்காட்டியில் 7-வது மாதமான அஷ்வினி மாதத்தின் 10-ம் நாளில் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா பொதுவாக கிரிகோரியன் காலண்டரில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுகிறது.
விஜயதசமி விழா, பொதுவாக துர்கை அம்மன், அசுரர்களை வென்றதன் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. தேவி மகாத்மியத்தில் சும்பன் – நிசும்பன் என்ற அசுரர்கள், இந்திரனையே வென்று அட்டகாசம் செய்கிறார்கள். அவர்களை துர்கா தேவி வதம் செய்கிறார். அதன் வெற்றியைக் குறிக்கும் தினமாகவும் விஜயதசமி சொல்லப்படுவதுண்டு.
மற்றொரு புராணக் கதையில் மது – கைதபன் என்ற இரு அசுரர்கள் பிரம்மனுக்கே அச்சுறுத்தலாக உருவெடுக்கும்போது அவர்களை தேவி அழிக்கிறாள் என்று கூறுகிறது. மற்றொரு கதையில், மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்து, மக்களைக் காப்பாற்றுகிறார். மகிஷனை வதம் செய்த சமுண்டீஸ்வரி கதையே மைசூர் நகருக்கு மிக நெருக்கமான கதையாக அமைந்திருக்கிறது. அந்த வகையில், நவராத்திரி விழாவின் நிறைவு நாளான இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு விஜயதசமி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இந்தப் புனிதப் பண்டிகை எதிர்மறை சக்திகளை முடிவுக்குக் கொண்டு வருவதோடு, வாழ்க்கையில் நன்மையைக் கடைப்பிடிக்கும் செய்தியையும் கொண்டு வருகிறது. உங்கள் அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்!” என்று தெரிவித்திருக்கிறார்.
விஜயதசமி முடிந்து 20 நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் மிகவும் போற்றப்படும் கடவுள்களில் ஒருவரான ராமபிரான், அரக்கர் குல அரசரான ராவணனை தோற்கடித்ததைக் கொண்டாடும் பண்டிகை தீபத் திருநாளான தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
देशभर के मेरे परिवारजनों को विजयादशमी की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व नकारात्मक शक्तियों के अंत के साथ ही जीवन में अच्छाई को अपनाने का संदेश लेकर आता है।
Wishing you all a Happy Vijaya Dashami!
— Narendra Modi (@narendramodi) October 24, 2023