வங்கக்கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள ஹமூன் புயல் காரணமாக, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலு பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ஹமூன் எனப் பெயரிட்டுள்ளது. இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்தது. நேற்று ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தில் திகாவிலிருந்து 550 கிலோ மீட்டர் தென்-தென்மேற்கிலும் மையம் கொண்டிருந்த ஹாமூன் புயல், ஒடிசாவின் பல்வேறு இடங்களில் மழை பொழிவை ஏற்படுத்தியுள்ளது.
புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வருவதால் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழையை எதிர்கொள்ள ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புயல் நாளை வங்க தேசத்தின் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே உள்ள இடத்தில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் காரணமாக, சென்னை,கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.