வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சமய நிகழ்வாகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் 10-வதும், இறுதி நாளுமாகும். இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் எழுத்து என்று அழைக்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற கடலோர பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழி, நாட்டுப்புறக் கலை போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகிறது.
வித்யா என்றால் அறிவு, ஆரம்பம் என்றால் துவக்கம் இதனாலேயே இதனை வித்தியாரம்பம் என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்கும் முக்கியமான திருவிழாவாகும்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் திருக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர். ஒவ்வொரு தாயாரும் தங்களது குழந்தைகளை மடியில் அமரவைத்திருந்தனர்.
அப்போது, திருக்கோவிலில் விநாயகர், சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்தும், சுவாமிக்குச் சிறப்பு பூஜைகள் செய்தும், குழந்தைகளின் நாக்கில் ஓம் என்று எழுதப்பட்டது.
மேலும், கல்வி கற்க பயன்படும் பள்ளி பாடப்புத்தங்கள், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றைச் சுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதத்துடன் அவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஏராளமான குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டதால் அந்த இடமே விழாக்கோலமாகக் காட்சியளித்தது. மகிழ்ச்சியுடன் கூடவே நிரம்பி வழிந்தது.