ஆயுதபூஜை பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று, 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையொட்டி, தொடர் விடுமுறை வந்ததால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில், 2,000 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து, இன்று 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர். பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 1,000 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.
பயணியர் வருகை அதிகமாக இருந்தால், கூடுதலாக பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.