அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விஜயதசமி கொண்டாடினார்.
அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் ராஜ்சாத்சிங் சென்றுள்ளார். தேஜ்பூரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடங்களில் ராஜ்நாத் சிங், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் தவாங் செக்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விஜயதசமி விழாவை கொண்டாடிய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் உங்களின் சேவைகளை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள் என்றும், உங்கள் சீருடையின் முக்கியத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
நீங்கள் எல்லைகளை பாதுகாப்பாக வைத்துள்ளீர்கள் என்றும், அதனால்தான் உலகில் இந்தியாவின் அந்தஸ்து வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 8-9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்பதை அனைத்து வளர்ந்த நாடுகளும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
நீங்கள் நாட்டின் எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்றால் இந்த அந்தஸ்து சாத்தியமில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.