ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தில் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராம பிரானுக்கு மிக பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜை 2020 -ல் ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி பிரதமர் மோடி திருக்கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.
ரூ.2000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கோவில், மொத்தம் 2.7 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதில், 57,400 சதுர அடியில் கோவில் கடிடமும், 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் இக்கோவில் அமைக்கப்பட உள்ளது.
மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும், 12 நுழைவு வாயில்கள் உள்ளன. மேலும், கோவிலில் விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா, சூரியன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் ஜொலிக்கின்றன. திருக்கோவில் கருவறை எண்கோண வடிவத்திலும், கர்ப்ப கிரகத்தில் உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் மின்னுகிறது.
திருக்கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் முன்பு பிரம்மாண்ட அனுமன் சிலை நம்மை வரவேற்கிறது.
இந்நிலையில், வரும் ஜனவரி 22 ம்- தேதி அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அயோத்தியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஸ்ரீராம பிரான் நல்லெண்ணத்தை மேலும் பரப்பும் வகையில், ஆங்காங்கே ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், வாய்ப்பு உள்ளவர்கள் அயோத்திக்கு நேரடியாக சென்று ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்க்கலாம். அங்கு செல்ல முடியாதவர்களுக்காக, நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் திருக்கோவில்களில் ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்வையிடவும் வழிபடவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
இதனால், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேக்கத்தை காண வாய்ப்பு கிடைத்துள்ளது.