திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்துள்ள நிலையில், இரு பிரம்மோற்சவ விழாக்களிலும் சேர்த்து உண்டியல் மூலம் ரூ. 47.56 கோடி வசூல் ஆகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான நேற்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயிலில் இருந்து புறப்பட்டு வராகசாமி கோயில் முகமண்டபத்தை அடைந்தார். அவருடன் சக்கரத்தாழ்வாரும் தனி பல்லக்கில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் உற்சவர்கள் ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். அத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற 2 பிரமோற்சவ விழாக்களில் உண்டியல் காணிக்கை ரூ.47.56 கோடி கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 11 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்துள்ளதாகவும், 57.64 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.