தமிழக கேரள எல்லைப் பகுதியில் சபரிமலை மேல்ஷாந்தி தலைமையில் நடைபெற்ற வித்யாரம்ப நிகழ்வில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர்.
நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. நெல், பச்சரிசியைக் கொண்டு எழுத்துக்கள் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்குவார்கள். விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பது நம்பிக்கை.
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் அரிசி அல்லது நெல்லில் ‘அ’ என்றும் ஹரி ஶ்ரீ என்றும் எழுத கற்றுக் கொடுப்பது வித்யாரம்பம் எனப்படுகிறது. அவ்வாறு மிக முக்கியமாக குழந்தைகள் கற்கும் போது முதலில் அரிசி அல்லது நெல்லில் எழுதச் சொல்வது சடங்காக பின்பற்றுவது வழக்கம். மேலும் மழலை குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியால் அல்லது தங்கத்தால் அ என்றும் ஹரி ஶ்ரீ என்றும் எழுதி கல்வியை தொடங்கி வைப்பார்கள்
இந்த நிகழ்வானது வெற்றியின் அடையாளமான விஜயதசமி அன்று நிகழ்த்தப்படுகிறது. மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது, ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பிக்கை.
அவ்வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான பாறசாலை பாரதிய வித்யா பீடம் தனியார் பள்ளியில் சபரிமலை மேல்ஷாந்தி விஷ்ணுநம்பூதிரி தலைமையில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு நாவில் ஹரி ஸ்ரீ கணபதியே நமக என எழுதியும் அரிசியில் கைகளால் எழுதியும் படிப்பு துவங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடைபெற்றது.