சென்னையில் இருந்து செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜை மற்றும் வார விடுமுறையைக் கழிப்பதற்காக வெளியூர்களில் பணியாற்றுவோர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். விடுமுறை முடிவடைந்த நிலையில், வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அதிக கட்டணம் வசூலித்ததாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மீது தமிழக போக்குவரத்துறை நடவடிக்கை எடுத்தது. இதனால், ஆம்னி பேருந்துகள் இயங்காது எனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தமிழக போக்குவரத்துறை மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணக் கட்டணம், அதேபோல், வெளியூர்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் பயணக் கட்டணத்தை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.1,610 முதல் ரூ.2,430 வரை கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1,930 முதல் ரூ.3,070 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.2,050 முதல் ரூ.3,310 வரை வசூல் செய்யப்படும். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.2,320 முதல் ரூ.3,810 வரை பெறப்படும். மேலும், சென்னையிலிருந்து சேலம் மற்றும் தஞ்சைக்கு- ரூ.1,650 முதல் ரூ.2,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.2,380 முதல் ரூ.3,920, வரை வசூலிக்கப்படும் என்றும், இதே போல, மேற்கண்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு இந்த கட்டணம் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது.