ஹமூன் புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மிக குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு ஹமூன் என்று பெயர் சூட்டப்பட்டது. இது ஒடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இந்த புயலானது இன்று ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வங்கதேசத்தில் கெபுரா – சிட்டகாங் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தீவிர புயலாக இருந்த ‘ஹமூன்’ புயல் வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடந்தது. இது அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 23-ஆம் தேதி நிலவிய மிக தீவிர தேஜ் புயல், நேற்றைய தினம் அதிகாலை 3 மணி அளவில் தெற்கு அல்கைடா அருகே ஏமன் கடற்கரையைக் கடந்தது. இதனால், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.