உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் பத்து நாட்களும், தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
பக்தர்கள் காப்பு கட்டி, மாலை அணிந்து, விரதம் இருந்து, சிவன், பார்வதி, காளி, துர்கை, கிருஷ்ணர், முருகன், அய்யனார், ஆஞ்சநேயர், குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து, அம்மனுக்குக் காணிக்கை செலுத்தினர்.
திருவிழாவின் 10-ஆம் நாளான நேற்று, மகிஷா சூரசம்ஹாரத்தைக் காண இலட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். பெரும்பாலான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக கடற்கரையில் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம் வந்து போரிடத் தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். இதனைத் தொடர்ந்து, சிங்க முகம், எருமை முகம், சேவல் முகம் என உருமாறிய மகிஷாசூரனை அம்மன் சூலாயுதம் கொண்டு வதம் செய்தார். அப்போது கூடியிருந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
பின்னர் கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலைச் சென்றடைந்தார்.
11-ஆம் நாளான இன்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.