உலகப் புகழ் பெற்ற மைசூர் தசரா திருவிழாவின் இறுதி நாளான நேற்று, ஜம்பு சவாரி ஊர்வலம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த கண்கொள்ளா காட்சியை இலட்சக்கணக்கான மக்கள் கண்டு இரசித்தனர்.
நவராத்திரி திருவிழாவும், தசரா பண்டிகையும் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், மைசூரில் நடக்கும் தசரா விழாவைப்போல வேறெங்கும் அவ்வளவு வண்ணமயமாக இருப்பதில்லை. கலை, கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மன்னர் காலம் தொட்டு கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
அந்த வகையில், உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா, கடந்த 15-ஆம் தேதி வெகுவிமரிசையாக தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தசரா விழா 413 ஆண்டுகளை நிறைவுசெய்து, 414-வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.
தசரா விழாவையொட்டி அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், மைசூர் நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும், உணவு மேளா, தசரா கண்காட்சி, புத்தகத் திருவிழா, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை நடைபெற்றது.
தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உட்பட ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் அனைத்து யானைகளுக்கும் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதற்கிடையே சாமுண்டி மலையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க சிலை, அரண்மனை வளாகத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
அதைத்தொடர்ந்து 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி அபிமன்யு யானை மீது ஏற்றி பாதுகாப்பாக கட்டப்பட்டது. அதன்பின்னர் தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து, அபிமன்யு யானை தங்க அம்பாரியை சுமந்து கம்பீர நடைபோட்டு செல்ல, மற்ற யானைகள் அணிவகுத்து நடந்து சென்றன.
இந்த ஊர்வலத்தில் கர்நாடகாவில் உள்ள 30 மாவட்ட நிர்வாகங்களின் சார்பிலும், கலைகலாச்சார வாகனங்கள், இசைக்குழுவினர், நாட்டுப்புற கலைக்குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் பின்தொடர்ந்து சென்றனர்.
மேலும், சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கும் ஊர்தியும், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்பான ஊர்திகளும் இதில் இடம் பெற்றிருந்தன. சாலையின் இருபுறங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து ஜம்பு சவாரி ஊர்வலத்தை கண்டு இரசித்தனர்.