ஆந்திராவில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் 3 பக்தர்கள் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆந்திர, கர்நாடக எல்லையில், பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் போது மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வது தொடர்பாக இரு கிராம மக்கள் கட்டைகளால் தாக்கிக்கொள்வதும் வழக்கம். அதில் பலர் உயிரிழப்பதும் காயம் அடைவதும் உண்டு.
இந்நிலையில், விழாவின் போது கட்டைகளால் தாக்கிக்கொள்ள வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கோயில் அருகே சிசிடிவி மற்றும் டிரோன் கேமராக்களும் நிறுவப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் எந்த முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
நேற்று இரவு விழா தொடங்கியதும், மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை கொண்டு செல்வது தொடர்பாக இரு குழு பக்தர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது தடிகள் மற்றும் இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்தது. இதனால் பகுதி முழுவதும் ரத்தக்களரியாக காட்சி அளித்தது. கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க சிலர் மரங்களின் மீது ஏறியுள்ளனர்.
அப்போது மரக்கிளை முறிந்த விழுந்ததில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.