காலிஸ்தான் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத கனடா அரசுக்கு எதிராக நிதி நடவடிக்கை பணிக்குழுவில் (Financial Action Task Force) இந்தியா புகார் அளிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளது என கனடா குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து இரு நாடுகளிடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இந்தியாவிலிருந்து தூதரகள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து 41 தூதர்களை கனடா திரும்ப பெற்றுக்கொண்டது.
இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா,இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மாற்றுக்கருத்தை தெரிவித்தன.
சர்வதேச விதிமுறைகளை இந்தியா மீறுவதாக குற்றம்சாட்டி, பயங்கரவாத நிதியுதவியின் முக்கிய பிரச்சினையிலிருந்து உலக சமூகத்தின் கவனத்தை திசை திருப்ப கனடா முயற்சித்து வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பல சான்றுகள் அளித்தும் கனடா அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பல குற்றவாளிகளை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி கேட்டபோதும், கனடா அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தேசிய புலனாய்வு முகமை முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விவகாரத்தில் ராஜதந்திர முறையில் அணுக இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட, ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பாரிஸை தளமாகக் கொண்ட கண்காணிப்பு அமைப்பான FATF உடன் இந்தியா “பழைய மற்றும் புதிய ஆதாரங்களின் ஆவணத்தை” பகிர்ந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.