சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்திருக்கிறது.
பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை மாற்றும்படி பரிந்துரைத்திருக்கிறது.
மேலும், பாடப் புத்தகங்களில் ‘இந்து வெற்றி’ குறித்த விஷயங்களை முன்னிலைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, பண்டைய வரலாறு என்பதற்கு பதிலாக கிளாசிக்கல் வரலாற்றை அறிமுகப்படுத்தவும், அனைத்துப் பாடங்களிலும் இந்திய அறிவு முறையை அறிமுகப்படுத்தவும் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக உயர்மட்ட குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கெனவே, ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழ் மற்றும் பிரதமர் மோடியின் இந்தோனேஸிய பயணம் குறித்த அறிவிப்பு ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதில் ‘பாரத்’ என்று பயன்படுத்தப்பட்டது. அதேபோல, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் மேஜையில் இந்தியா என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், பள்ளி பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்ற பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உயர்மட்டக் குழுவின் தலைவர் சி.ஐ.ஐசக் கூறுகையில், “பள்ளிப் பாடத்திட்டத்தை திருத்தியமைக்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அமைத்த சமூக அறிவியலுக்கான உயர்மட்டக் குழு, பாடப்புத்தகங்களில் ‘இந்தியா’ என்ற பெயரை ‘பாரத்’ என்று மாற்றவும், பாடத்திட்டத்தில் பழங்கால வரலாறு என்று இருப்பதை ‘கிளாசிக்கல் ஹிஸ்டரி’யை அறிமுகப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
பாரதம் என்பது பழமையான பெயர். பாரதம் என்ற பெயரின் பயன்பாடு 7,000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு புராணம் போன்ற பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்ற சொல் கிழக்கிந்திய கம்பெனியால் நிறுவப்பட்டது. மேலும், 1757-ல் பிளாசி போருக்குப் பிறகு பயன்படுத்தப்பட்டது. எனவே, அனைத்து வகுப்புகளிலும் உள்ள மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில் ‘பாரத்’ என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று குழு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது” என்றார்.