இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் பட்டாலியனுக்கு தலைமை தாங்கிய தய்சீர் முபாஷர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது.
தங்கள் நாட்டின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல் 19-வது நாளாக இன்றும் நீடித்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி இருக்கிறது. இத்தாக்குதலின்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் 400-க்கும் மேற்பட்ட இலக்குகளை இஸ்ரேல் அழித்திருக்கிறது.
இந்த தாக்குதலில்தான் கான் யூனிஸில் உள்ள ஹமாஸ் பட்டாலியனுக்கு தலைமை தாங்கிய தய்சீர் முபாஷர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “கொல்லப்பட்ட முபாஷர் இதற்கு முன்பு ஹமாஸ் கடற்படையின் தளபதியாக பணியாற்றியதோடு, பயங்கரவாதக் குழுவின் வெடிமருந்து தயாரிப்பு அமைப்பிலும் முக்கிய பதவிகளை வகித்திருக்கிறார்.
இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முபாஷருக்கு முக்கியப் பங்கு இருந்தது. மேலும், 1987-ல்தீவிரவாதக் குழுவில் முதன்முதலில் இணைந்த ஹமாஸ் படைகளின் ஒட்டுமொத்த தளபதியான முகமது டெய்ஃபுக்கு இணையானவர் முபாஷர். குறிப்பாக, 2002-ம் ஆண்டு குஷ் கடிஃப் தாக்குதல் உட்பட இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான பல கொடிய தாக்குதல்களை நடத்தியவர் முபாஷர்தான்.
அதேபோல, 2014-ம் ஆண்டு இஸ்ரேலிய கடற்கரையில் ஊடுருவி தாக்குதல் நடத்தியது, இராணுவ புறக்காவல் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றிலும் முபாஷருக்கு தொடர்பு உண்டு. இது தவிர, சமாரியா, ஜெனினில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் உறுப்பினர் உட்பட 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்” என்று தெரிவித்திருக்கிறது.