வடகிழக்கு பருவ மழை தீவிரமடையும் நிலையில், வருகிற 29-ஆம் தேதி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 29-ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் ஹாமூன் நேற்று மாலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுவிழந்தது. இன்று காலை 01.30 – 02.30 மணி அளவில் புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங்-க்கு அருகில் கடந்தது.