சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகை முன்பு மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாளிகை உள்ளது. இன்று இந்த மாளிகை முன்பு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒரு பொருளைத் தூக்கி வீசியெறிந்தார்.
பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் இதைக் கவனித்துவிட்டனர். உடனே, பாதுகாப்புப் பணியிலிருந்து காவல் அதிகாரிகள், அந்த பொருள் பக்கத்தில் சென்று பார்த்த போது அது பெட்ரோல் குண்டு என தெரிந்ததும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அந்த நபரை விரட்டிப் பிடித்தனர்.
அப்படியே, அவரை பத்திரமாகக் கிண்டி காவல் நிலையத்தில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, அவரது பெயர் கருக்கா வினோத் என்பதும், அவர் பிரபல ரவுடி என்பதும், இவர் பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும், ஆளுநர் மாளிகை முன்பு எதற்காக, பெட்ரோல் குண்டு வீசினார் என காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, முஸ்லீம் தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டி பெட்ரோல் குண்டை வீசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கைதாகி கடந்த வாரம்தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.