அரசு பள்ளியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்று வலியுறுத்தும் காணொலியில் வைரலாகியுள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வு நடைமுறைப் படுத்தியதில் இருந்து திமுக அதனை எதிர்த்து வருகிறது.
நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டால் அதனையும் தங்கள் அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருவதாக பாஜக உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.
தற்போது நீட் தேர்வில் விலக்கு பெறும் நோக்கில் ஐம்பது நாட்களில், ஐம்பது லட்சம் கையெழுத்து பெறுவதற்கான ஓர் இயக்கத்தைத் துவங்கியிருக்கிறது தி.மு.க. இது லோக்சபா தேர்தலுக்கான நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இப்படி இருக்கும் சூழலில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களிடம் நீட் பற்றிய பொய் பிரசாரம் செய்யும் காணொலி வெளியாகியுள்ளது.
அதில், மாணவர்கள் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து பெறுகிறார். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என்றும் பேசுகிறார்.
இது மாணவர்களை நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்க வைத்து திமுக அரசியல் செய்வதாக உள்ளதாகவும், இது பள்ளிக்கூடமா அல்லது அரசியல் மேடையா எனவும் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்து திமுக அரசியல் செய்வதாக உள்ளது என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.