ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் உண்மையான சட்டம் ஒழுங்கை பிரதிபலிப்பதாக தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி சர்தர் படேல் சாலை வழியாக நடந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென மறைத்து தயாராக கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகை நோக்கி வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன் விழுந்து வெடித்து சிதறி தீப்பற்றியது.
ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி எக்ஸ தளத்தில் விடுத்துள்ள பதிவில்,
ராஜ்பவன் அருகே பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தை பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய அதே நபர் தான் இந்த தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளதாகவும் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.