எத்தனை நிறுவனங்கள் எந்தக் காலத்தில் இயங்கின என்பதை விளக்கி ஒரு வெள்ளை அறிக்கை அளிக்க திமுக தயாரா? எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை பெருந்துறையில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கொடுமணல் பெருங்கற்கால சின்னங்கள், கொடுமணல் அகழாய்வு மூலம், இந்தப் பகுதி கி.மு. 300 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் இரும்பு உருக்கு தொழில் பெருங்கற்காலம் முதல் சோழர் காலம், ஆங்கிலேயர் காலம் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது தெரியவந்துள்ளது.
கிபி முதலாம் நூற்றாண்டில் ரோமானியருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த பெருமைக்குரியது ஈரோடு. இந்தியாவிலேயே உயரமான ஒரே கல்லால் ஆன குமரிக்கல்பாளையம் நடுகல், பெருங்கற்காலத்தை சேர்ந்த, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கல் என்று அழைக்கப்படும் இந்த நடுகல், தரைக்கு மேல் 30 அடி உயரத்திலும் தரைக்கு கீழ் 15 அடி ஆழத்திலும் உள்ளது. நமது தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் இது குறித்த செய்தியை நாம் சொல்லி, அவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து இந்த நடுகல்லை ஆராய்ச்சி செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
பெருந்துறை தொகுதி, 1977 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ஒருமுறை கூட திமுக வென்றதில்லை என்ற வரலாறுக்கு சொந்தமான ஊர். அதனால் தான் ஏனோ பெருந்துறை மக்களை தொடர்ச்சியாக வஞ்சித்து வருகிறது திமுக.
இந்த பகுதியில் உற்பத்தி ஆகும் ஊத்துக்குளி வெண்ணெய் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது. ஆனால் தமிழக அரசு இந்தப் பகுதியை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், தினமும், மூன்றாயிரம் லிட்டர் வெண்ணெய் தயாரித்து வந்தவர்கள் தற்போது வெறும் 300 லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்கிறார்கள்.
எருமை வளர்ப்பு குறைந்ததால், பால் வரத்தும் குறைந்தது. இதை தடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? மத்திய அரசின் கோகுல் திட்டத்தின் மூலம் இந்தப் பகுதி மக்கள் கால்நடைகள் வாங்க பாஜக உதவும். ஊத்துக்குளி வெண்ணெய்க்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும்.
தென்னை மற்றும் பனைத் தொழில் செய்வோர் குன்னத்தூர் சுற்றுப் பகுதிகளில் அதிக அளவில் வசிக்கின்றார்கள். குன்னத்தூர், கருப்பட்டிக்குப் புகழ் பெற்றது. குன்னத்தூர் கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரவேண்டும் என இந்த மக்களின் கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும். தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பாசன மேம்பாட்டிற்காக நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்கிய நிதி 2962 கோடி ரூபாய். அத்திக்கடவு அவிநாசி திட்டம் என்பது மழை காலங்களில் பவானி ஆற்றின் வெள்ள உபரி நீரைக்கொண்டு ஈரோடு கோவை திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மொத்தம் நிரப்புவதாகும்.
இந்தத் திட்டத்தில் விடுபட்டுள்ள 1200க்கும் மேற்பட்ட குளங்களில் பெருவாரியான குளங்கள் பெருந்துறை பகுதியில் உள்ளது. இந்த குளங்களை அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இணைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் 2700 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவில் உள்ள பெரும் தொழிற்பேட்டைகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தோல் தொழிற்சாலை மற்றும் சாயத் தொழிற்சாலைகள் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள குளம் குட்டைகளில் திறந்து விட்டு, சுற்றிலும் 20 கிமீ தொலைவிலுள்ள ஊர்களில் நிலத்தடி நீர், கெமிக்கல் மற்றும் கழிவு நீர் கலந்த கடினத் தன்மை உள்ள நீராகிவிட்டது.
477 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாலத்தொழுவு குளம் முழுவதும் கெமிக்கல் மற்றும் கழிவு நீர் குளமாகிவிட்டது. பெருந்துறையும் ஈரோடும் புற்று நோயின் மையமாகிவிட்டது. முதலில் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதற்கு பிறகு கால்நடைகள் வளர்த்து வந்தனர் தற்போது குடியிருக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தான் அமைச்சராகக் காரணம் துர்கா ஸ்டாலின் அம்மாதான் என்று கூறும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ மெய்யநாதன், பெருந்துறை சிப்காட்டுக்கு நேரில் வந்து ஆய்வு செய்யாமல், போராடும் மக்களின் உணர்வுகளைப் புறக்கணிக்கிறார்.
சிப்காட் வளாகத்தில் தாட்கோ உள்ளது. பட்டியல் சமூக மக்கள், சிறு தொழில் தொடங்குவதற்கு 250 தொழில் கூடங்கள், மின் இணைப்பு, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 28 ஆண்டுகள் கடந்த பிறகும், ஒரு பட்டியல் சகோதர சகோதரிகளுக்கு கூட அங்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யாமல் 250 தொழிற்கூடங்களும் பாழடைந்து கிடக்கிறது என்று குற்றச்சாட்டு உள்ளது.
சிப்காட் வளாகத்தில் தாட்கோ உள்ளது. பட்டியல் சமூக மக்கள், சிறு தொழில் தொடங்குவதற்கு 250 தொழில் கூடங்கள், மின் இணைப்பு, தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஆனால் 28 ஆண்டுகள் கடந்த பிறகும், ஒரு பட்டியல் சகோதர சகோதரிகளுக்கு கூட அங்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யாமல்…
— K.Annamalai (@annamalai_k) October 26, 2023
இல்லை என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நிரூபிப்பாரா? எத்தனை பேருக்கு அங்கு தொழில் தொடங்க உதவி வழங்கப்பட்டது, எத்தனை நிறுவனங்கள் எந்தக் காலத்தில் இயங்கின என்பதை விளக்கி ஒரு வெள்ளை அறிக்கை அளிக்க திமுக தயாரா? திமுகவின் போலி சமூகநீதி நாடகம் இதுதான்.
பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை நிர்வாகிகள் ஜூன் மாதம் 30ஆம் தேதி என்னைச் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார்கள். மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களுக்கு உடனடியாக இந்த கோரிக்கை கடிதத்தை அனுப்பி வைத்தோம்.
தமிழ் மக்களின் நலன் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி, பெருந்துறை பகுதியில் மேம்பாலங்கள் அமைப்பதற்கு 93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 37,838 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 3,14,575 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,66,883 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,02,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,84,153 பேருக்கு, 95,782 பேர் பிரதமரின் விவசாயிகள் நலநிதியின் மூலமாக வருடம் 6,000 ரூபாய், 4683 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி, இவை மத்திய அரசு வழங்கியுள்ள நலத்திட்டங்கள்.
ஆனால் திமுக, பெருந்துறையில் ஆட்டோ நகர் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி எண் 392 நிறைவேற்றவில்லை. ஈரோடு மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைப்போம் என்று சொல்லி ஒரு செங்கல் கூட வைக்கவில்லை.
வேளாண் கருவிகள் உற்பத்தி தொழிற்பேட்டை, ஈரோடு வர்த்தக மையம், நெசவாளருக்கென்று தனி கூட்டுறவு வங்கி என ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த மக்கள் விரோத திமுக கூட்டணியைப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர, பாஜக கூட்டணி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.