தமிழக கோத்தகிரி- மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உலா வருகின்றன. வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியே வரும் யானைகள் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.
இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான லாரிகளில் கரும்புகள் ஏற்றிச் செல்லப்படுவதால் கரும்புக் கட்டுகளைச் சாப்பிடுவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கரும்புக்கட்டுகளை ஏற்றிச் சொல்லும் லாரிகளை வழிமறித்து கரும்புகளைச் சாப்பிடுவது தொடர் கதையாகி வருகிறது.
அதேபோல், சாலை நடுவே நின்று கொண்டு பேருந்து, கார்களை வழிமறிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் கீழுதட்டுப்பள்ளம் பகுதியில் சென்ற காரை வழிமறித்த ஒற்றை யானை ஒன்று காரை தனது கால்களால் பந்தாடி விளையாடியது. காரில் இருந்தவர்களும், ஓட்டுநரும் யானைக்குப் பயந்து, முன்னரே தப்பியதால் உயிர் பிழைத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.