சிதம்பரம் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச் சாலையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளைத் தினமும் பள்ளிக்குச் சொந்தமான வேனில் அழைத்து வரப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை பரங்கிப்பேட்டை, முட்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள குழந்தைகளைப் பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு வந்துள்ளனர். அப்போது, வேனில் 20 குழந்தைகள் பயணம் செய்தனர்.
இந்த வேன் பி முட்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சடன் பிரேக் போட்டு உடனே வேனை நிறுத்தினார். அதற்குள் அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்து பள்ளி குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.
சிறிது நேரத்தில் பள்ளி வேனில் தீ மளமளவெனப் பரவி வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பள்ளி வேனை குறிப்பிட்ட காலத்திற்குள் போக்குவரத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தும், உரிய உத்தரவுகளை வழங்கியும் இருந்தால் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டு இருக்காது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.