திமுக முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்குதல், இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி நாளை அதாவது 27-ம் தேதி திருநெல்வேலி வருகிறார்.
அவரை வரேவற்க திமுக மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் மற்றும் தனிநபர்கள் சார்பில் திரும்பிய திசை எங்கும் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். இதில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் படங்கள் பெரிதாகப் போட்டு வைத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் அவதி அடைந்தனர். மேலும், சாலைகளில் செல்லும் வானங்களும் நெரிசலில் சிக்கி திணறின. இதனால், டிஜிட்டல் பேனர் வைக்க பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்புகளை மீறி திமுகவினர் பேருந்து நிலையம், இரயில் நிலையம் மற்றும் சாலைகளில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், சட்ட விரோத டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணஸ்வாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநெல்வேலியில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் உடனே அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்தார். இதனால், நெல்லையில் பரபரப்பு நிலவி வருகிறது.