மீண்டும் டெட் தேர்வை நடத்தமாட்டோம் என்ற திமுக அரசு ! தன் தேர்தல் வாக்குறுதி எண் 177ஐ மறந்ததா? எனத் தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ் நாட்டிலே போற்றப்பட வேண்டிய ஆசிரியர்கள், செவிலியர்கள் எல்லாம் தமிழக அரசிடம், தங்கள் வாழ்க்கைக்காக, கையேந்திப் போராடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு, அதில் சுமார் 24000 பேர் ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்ட பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு எஞ்சியுள்ள தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு, புதியவர்களுடன் மீண்டும் போட்டித் தேர்வு எழுதச் சொல்வது நியாயமற்றது. பிறகு, எந்த நியாயத்தில் திமுகவினர் நீட் தேர்வை எதிர்க்கிறார்கள்? என்பது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு விட்டது: ஆனால் 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை.
அரசாணை எண் 252 இன் அடிப்படையிலே சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அப்போதும் அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை. தீடீரென்று அரசாணை எண் 71 அடிப்படையிலே வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற முறை புகுத்தப்பட்டது. பின்னர் விலக்கப்பட்டது.
ஆனாலும், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டெட்டில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. இதற்கிடையே புதிய அரசாணை 149ஐ நடைமுறைப்படுத்த அரசு முயற்சிப்பது, நியாயமற்றது.
திமுகவின் தேர்தல் அறிக்கை எண் 177-ல் குறிப்பிட்டது போல தகுதி ஆசிரியர்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர்பணி வழங்கப்படும் என்ற தங்கள் வாக்குறுதியை, நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.
பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றபிறகும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிவோடு கேட்டு ஆவன செய்ய மனமில்லாத திமுக அரசு, பிரச்சனையின் முக்கியத்துவத்தை உணராமல், தங்கள் வாக்குறுதியையும் மதித்து நிறைவேற்றாமல், மாநில அரசு பாராமுகமாக இருப்பது துரதிஷ்டவசமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டெட் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க ஆவன செய்யவேண்டும் என்று பாஜக மீண்டும் வலியுறுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.