தமிழ் திரையுலகில் பல படங்களுக்குப் பின்னணி இசையும், பாடல்களும் அமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெலுங்கு பட உலகிலும் கால் பதித்தார். அதையும் தாண்டி ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்து தனது திறமையை நிரூபித்தார்.
தனது குரல் பாடுவதற்கு ஏற்றவகையில் இல்லை என்பதால், தனது தந்தையின் கனவை நினைவேற்றாமல் தவித்தார்.
பாடத்தான் முடியவில்லை, இசை அமைக்க தடை ஏதும் இல்லையே என இசை மீது வெறி கொண்டு பயிற்சி எடுத்தார். இதனால், 2001 -ம் ஆண்டு தனது முதல் படமான ‘மின்னலே’ மூலமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
2011 -ம் ஆண்டு முதல் ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தி வருகிறார். இதில், தமிழ் முன்னணி பாடகர்களான கார்த்திக், ஹரிஹரன், சின்மய, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஷ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே, பென்னிதயாள், ஆண்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் என பெரும்பாலான பாடகர்கள் அனைவருமே பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சிக்குக் காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக டிக்கெட் விற்கக் கூடாது, டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்து தர வேண்டும், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்து இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏர்.ஆர். ரகுமான் நடத்திய இசைக்கச்சேரி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.