கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய போர்க்கப்பலில் பணிபுரிந்த 8 பேர் ஓய்வு பெற்றதும் கத்தாரில் உள்ள அல்தஹ்ரா சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் கன்சல்டன்சி என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிறுவனம் கத்தார் ஆயுதப்படையினருக்கு பயிற்சி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வந்தது.
இந்நிலையில் நீர்மூழ்கி திட்டம் தொடர்பாகவும், இஸ்ரேலுக்காகவும் உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து 8 பேரும் கைது செய்யப்பட்டு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் பல முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை வழங்கி கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், கத்தார் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும், அனைத்து சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது. சட்ட மற்றும் தூதரக உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருவதாகவும், இது குறித்து கத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.