தற்சார்பு என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சமீபத்திய போர்களின் மூலம் இந்தியா பாடம் கற்றுக்கொண்டது என்று இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே கூறியிருக்கிறார்.
இந்திய இராணுவம் நீலப் போர் ஆய்வு மையத்துடன் இணைந்து ‘சாணக்யா பாதுகாப்பு உரையாடல் 2023’ என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறது. இதன் முதல் அமர்வு நவம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறுகிறது. இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உரையாடல் தெற்காசியா மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பாதுகாப்பு சவால்கள் பற்றிய விரிவான பகுப்பாய்வை மேற்கொள்ளும். மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பொருத்தமான பங்குதாரராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்த, பிராந்தியத்தில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான சாலை வரைபடத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, “சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தை எதிர்கொள்ள இராணுவம் தயாராகி வருகிறது. இராணுவத்தில் இதுவரை 40,000 அக்னிவீரர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களது கருத்துக்கள் ஊக்கம் அளிப்பதாக உள்ளன.
போர்க்களத்தின் குணாதிசயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களை எதிர்கொள்ள இராணுவம் தயாராக வேண்டியுள்ளது. தற்சார்புடன் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ரஷ்யா-உக்ரைன் போரில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொண்டது. உலகில் வரலாறு காணாத மாற்றங்களை நாம் காண்கிறோம். சர்வதேச விவகாரங்களில் தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சவாலானதாக இருந்தாலும் திருப்திகரமாக உள்ளது” என்றார்.