சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளேன் – தோனி.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 18 அல்லது 19 தேதியில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் அனைவரின் கண்களும் சிஎஸ்கே அணி பக்கமே திரும்பியுள்ளது.
ஏனென்றால் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பின் தோனி பேசுகையில், இரசிகர்களின் பேரன்பிற்காக இன்னும் ஒரு சீசன் விளையாட முயற்சிப்பேன் என்று கூறியிருந்தார்.
அந்த முடிவு உடல்தகுதியை பொறுத்தது தான் என்றும், ஓய்வு முடிவை எடுப்பதற்கு 6 மாதம் காலம் அவகாசம் இருக்கும் போது, தற்போது கவலைப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார். தோனி கூறிய 6 மாத கால அவகாசம் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெங்களூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பேசும் போது, கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூறினார்.
அப்போது தோனிக்கு அருகில் இருந்த நபர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் தோனி ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறி தவறை திருத்தினார். அதற்கு தல தோனி, ஆம் என்று கூற, சிஎஸ்கே இரசிகர்கள் கரகோஷம் எழுப்பினர்.
அதன்பின் தோனியின் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் இன்னும் குணமடையவில்லை. மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைவேன் என்று கூறியிருக்கிறார்கள். அதேபோல் தினசரி வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இதன் மூலம் தோனி கட்டாயம் அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே கேப்டனாக விளையாடுவார் என்று இரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அண்மை காலமாக விளம்பர படங்களில் நடிப்பதற்காக சென்னை, பெங்களூர் என்று அடுத்தடுத்த நகரங்களுக்கு தோனி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.