மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் உருவாக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நடைபெற்ற ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நிறைவுநாள் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியல் சாசனத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு, சாமானியர்களுக்கு மனிதாபிமானத்துடன் சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அகாடமியில் அடிப்படைப் பயிற்சி முடித்த ஐபிஎஸ் தகுதிகாண பயிற்சியாளர்கள் புதிய குற்றவியல் நீதி முறை அமலுக்கு வரும்போது முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழு ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் அந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்படும் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார்.
புதிய மசோதாக்கள் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.