விரைவில் உத்தரகண்ட் – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும், என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் சார்பில், டிசம்பர் 8 மற்றும் 9-ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, தமிழக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மஹாராஜ், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுரப் பகுகுணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது, “தொழில் முதலீட்டை ஈர்க்க, உத்தரகண்ட் டேராடூனில், டிசம்பர் 8, 9ல் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்த பத்தாண்டு உத்தரகண்டிற்கானது என்று தெரிவித்துள்ளார்.
அதை, உண்மையாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். முதலீட்டாளர்களின் முகவரியாக உத்தரகண்ட் திகழ்கிறது. அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன், விமானம், ரயில், சாலை என எளிதில் அணுகும் வகையில் இணைப்பு வசதிகள் உள்ளன. மாநிலத்தில், 70 சதவீதம் வனப்பகுதி உள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில், மருத்துவம், சுற்றுலா, கல்வி என பல துறைகளில் தொழில் தொடங்குவோருக்குச் சலுகைகள் வழங்க, 30 கொள்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தொழில் நிறுவனங்களுக்கு, 6,000 ஹெக்டேர் நிலம் தயாராக உள்ளது. மின் கட்டணம் மிகவும் குறைவு. ஆண்டு முழுதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படும்.
காசி – தமிழ் சங்கமம் போல், உத்தரகண்டில், உத்தரகாண்ட் – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
உத்தரகண்ட் முதல்வரின் செயலாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், ‘தமிழகம், உத்தரகண்ட் இடையே, கலாச்சார தொடர்பு உள்ளது. தமிழ் இலக்கண நூலை எழுதிய அகத்தியரின் ஆசிரமம் உத்தரகண்டில் உள்ளது. வட மாநிலங்களில், உத்தரகண்டில் மட்டும் தான் முருகன் கோவில் உள்ளது. தேசிய வளர்ச்சி விகிதத்தை விட, உத்தரகாண்டின் வளர்ச்சி விகிதம் அதிகம்’ என்று கூறினார்.