நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்தக் திருக்கோவிலுக்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2009 -ம் ஆண்டு கடைசியாக நடைபெற்றது. இந்நிலையில், பல லட்சம் ரூபாய் செலவில் தனியார் பங்களிப்புடன் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களாக, கோவில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.
இக்கோவிலுக்கு கோபுரம் கிடையாது என்பதால், சுவாமிக்குப் பாலாலயம் செய்யாமல், திருப்பணிகள் நடைபெற்று வந்தது.
அந்த வகையில், முதற்கட்டமாக, விநாயகர் திருக்கோவில் புனரமைப்பு-ம், அடுத்து, திருக்கோவில் உட்புறம், வெளிப்புறத்தில் வர்ண பூச்சுகளும், சுவாமி சிலைகளுக்கு வர்ணம் பூசுதலும், 33 விதமான ஆஞ்சநேயர் சிலை வடிவமைப்புடன் கூடிய பணிகள் நிறைவு பெற்றன.
இதனிடையே, வரும் நவம்பர் 1 -ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. விழாவில், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, நாமக்கல் நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.