ஜம்மு காஷ்மீரில் எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கும் நிலையில், எல்லையில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநில ஏ.டி.ஜி.பி. தெரிவித்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை, 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அம்மாநிலத்தில் தீவிரவாதத்தை வேரறுக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், தீவிரவாதிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினரும், இராணுவ வீரர்களும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த மோதலில், இராணுவ கர்னல், மேஜர், காவல்துறை டி.எஸ்.பி. மற்றும் இராணுவ வீரர் என 4 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பிறகு, இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் தீவிரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத்துறை மூலம் காவல்துறையினருக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டார் கும்காடி பகுதியில் இராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கூட்டு நடவடிக்கைக் குழுவினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு கூட்டு நடவடிக்கைக் குழுவினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலைப்பட்டனர்.
மேற்கண்ட தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவுபெற்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தீவிரவாதிகளிடம் இருந்து, ஏ.கே. ரக துப்பாக்கிகள் 2 மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “குப்வாரா மாவட்டம் மச்சல் செக்டாரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்தது. எனவே, எல்லை வேலி அருகே இராணுவ வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முன்னதாக 2 தீவிரவாதிகளும், பிறகு 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதை காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. உறுதிப்படுத்தி இருக்கிறார்” என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இந்த ஆண்டு 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 37 பேர் வெளிநாட்டு தீவிரவாதிகள் என்றும், 9 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் தீவிரவாதிகளை விட வெளிநாட்டுத் தீவிரவாதிகள் 4 மடங்கு அதிகமாக கொல்லப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.