நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தலைச் செயல்படுத்தும் வகையில் சட்ட ஆணையம் தனது இறுதி அறிக்கையைத் தயாரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநில சட்டப் பேரவை தேர்தல், மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. நாட்டில் உள்ள பெரும்பாலான பொது மக்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இதன் முதல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்த 30 லட்சம் மின்னணு இயந்திரங்கள் தேவைப்படுகிறது. காரணம், நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் இயந்திரங்கள் தேவைப்படுகிறது.
மேலும், வாக்குப்பதிவு செய்யப்பட்ட பின்பு, அந்த இயந்திரங்களைப் பாதுகாக்க மிகப் பெரிய அளவிலான இடமும் தேவைப்படுகிறது. இது தொடர்பாக, சட்ட ஆணையத்திடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தும் வகையில், இறுதி அறிக்கை தயாராகி வருகிறது.