வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிக்கிம் மாநில டீஸ்டா ஆற்றில் இரண்டாவது பாலத்தை ராணுவத்தினர் கட்டி முடித்துள்ளனர்.
வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த 4-ஆம் தேதி அதிகாலை மேக வெடிப்பால் அதீத கனமழை பெய்தது. இதையடுத்து, டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுங்தாங் பகுதியில் உள்ள நீா்மின் திட்ட அணை உடைந்தது.
இதனால், மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், டீஸ்டா ஆற்றில் இரண்டு தொங்கு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ராணுவத்தினரின் தீவிர முயற்சியின் காரணமாக முதல் பால பணிகள் கடந்த 22ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்நிலையில் மங்கனில் கட்டப்பட்டு வந்த இரண்டாவது பால பணிகள் கடந்த 26ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து அதனை ராணுவ உயரதிகாரிகள் திறந்து வைத்தனர். இதன் மூலம் மக்கள் நடந்து செல்லவும், ஜிப் லைன்கள் மூலம் நிவாரணப் பொருட்களை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மீட்புபடையினர் தெரிவித்தனர்.