சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆத்தூரிலிருந்து சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பேருந்து சாலையில் சீராக சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநர் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டதால், பேருந்தைச் சுதாரித்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் ஓட்டுநர் இளையராஜாவுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதால், அப்படியே மயங்கினார்.
இதில், பேருந்து கட்டுப்பாடு இழந்து சாலையில் தாறுமாறாக சென்று தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில், சாலையில் சென்றவர்கள் ஓட்டுநர் இளைரஜா மற்றும் பொது மக்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஓட்டுநருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.