கேரளாவில் நடந்த ஹமாஸ் ஆதரவு பேரணியில் இந்து மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. தலைவர், ஹமாஸ் தீவிரவாதிகளை போர் வீரர்கள் போல சித்தரித்து போற்றுவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.
காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி கண்மூடித்தனமாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு மக்கள் 1,400 பேரை படுகொலை செய்தனர். இத்தீவிரவாதிகளுக்கு இஸ்ரேல் அசுரத்தனமான பதிலடி கொடுத்து வருகிறது. ஆனால், தீவிரவாத அமைப்பான ஹமாஸுக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய அமைப்புகளால் இந்தியா முழுவதும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், கேரள மாநிலம் மலப்புரத்தில், சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் மூலம் ‘ஒற்றுமை நிகழ்வு’ என்கிற பெயரில் நேற்று மாலை 4:30 மணிக்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த இயக்கம் ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் என்கிற தீவிரவாத அமைப்பின் இளைஞர் பிரிவாகும். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பேசிய, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் முன்னாள் தலைவர் காலித் மஷால், இந்து மதத்தையும், சியோனிசத்தையும் (யூத மதம்) அழித்தொழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.
காலித்தின் உரை, அங்கிருந்த பெரிய திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, பேரணியில் கலந்து கொண்டவர்களை ஹமாஸ் அமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொண்ட காலித், இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறார். இதை அங்கிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ஆதரவு தெரிவித்தனர். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததோடு, ‘புல்டோஸ் இந்துத்வா’ மற்றும் ‘சியோனிசத்தை அழிப்போம்’ என்ப போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.சுரேந்திரன், இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்று கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். மேலும், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மாநில காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்து கேள்வி எழுப்பியவர், “பாலஸ்தீனத்தை காப்பாற்றுங்கள் என்கிற போர்வையில், ஹமாஸ் தீவிரவாத அமைப்பையும், அதன் தலைவர்களையும் போர் வீரர்கள் போன்று போற்றுகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆகவே, இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த காலித் மஷால்?
பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸின் முன்னாள் தலைவர்தான் இந்த காலித் மஷால். 1967-ல் நடந்த 6 நாள் போருக்குப் பிறகு காலித் மஷாலின் குடும்பம் காஸாவின் மேற்குக் கரையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், பல்வேறு அரபு நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார். 1987-ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தை தோற்றுவித்தபோது, குவைத்தில் ஹமாஸ் கிளையின் தலைவராக இருந்தார்.
1992-இல் அவ்வமைப்பின் பொலிட் பீரோவின் தலைவராகவும், நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார். 2004-ஆம் ஆண்டு ஷேக் அகமது யாசின் மற்றும்அப்தெல் அஜிஸ் அல் ரான்டிசியை இஸ்ரேல் கொலை செய்ததைத் தொடர்ந்து, ஹமாஸின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டார். 2006-ம் ஆண்டு பாலஸ்தீன சட்டமன்றத் தேர்தலில் ஹமாஸ் தனது தலைமையில் பெரும்பான்மையான இடங்களை வென்று உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இதன் பிறகு, 2017-ல் தனது பதவிக் காலத்தின் முடிவில் பொலிட் பீரோ தலைவர் பதவியில் இருந்து காலித் விலகினார்.