அமெரிக்காவின் போர் விமானத்தை சீனாவின் ஜெட் ரக போர் விமானம் வெறும் 10 அடி தொலைவில் நெருங்கி பறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென் சீனக் கடற்பகுதியின் சர்வதேச வான் எல்லையில், அமெரிக்க விமானப் படையின் பி52 குண்டுவீச்சு விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, சீனாவின் ‘ஷென்யாங் ஜே 11’ என்ற ஜெட் ரக போர் விமானம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நெருங்கி வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி இருக்கிறது.
மேலும், அவ்வப்போது அருகருகே பறந்து வந்த சீனாவின் ஜெட் விமானம், ஒரு கட்டத்தில் 10 அடி தொலைவில் மிகவும் நெருக்கமாக பறந்து வந்ததாகக் கூறியிருக்கும் அமெரிக்கா, அது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க இராணுவத்தின் இந்தோ – பசிபிக் பிரிவு கூறுகையில், “சீன போர் விமானியின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக இருந்தன.
அதீத வேகத்தில் அவர் அமெரிக்காவின் விமானத்துக்கு அருகில் பறந்து ஆபத்தை ஏற்படுத்த முயன்றார். சர்வதேச வான் பாதுகாப்பு விதிகளை மீறும் வகையில் வெளிச்சம் குறைவாக இருந்த நேரத்தில் இரவில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.